பக்கம் எண் :

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே யறிந்து தம்மைக் காக்கவல்ல அறிவுடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் அஞ்சி நடுங்குமாறு வரக்கூடிய துன்பம் ஒன்று மில்லை.

நோய்செய்யும் துன்பத்தை நோயென்றார். நோவது நோய். காத்தலாவது வராமல் தடுத்தல், அல்லது தம்மைத்தாக்காதவாறு தமக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தேடிவைத்துக் கொள்ளுதல். வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் என்னும் மூவகைக் காப்பினுள் முதலதே தலையாயதும் செய்ய வேண்டுவதும் எனக்கூறியவாறு.