எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - அறிவாற்றல்களிலும் இடம் பொருளேவல்களிலும் தான் மிகவுயர்ந்தபோதும் தன்னை மெச்சிச் செருக்குறா தொழிக; நன்றி பயவாவினை நயவற்க-தனக்கும் தன்நாட்டிற்கும் நன்மை தராத செயல்களை மானத்தினா லேனும் செருக்கினாலேனும் இன்பங்கருதியேனும் விரும்பா தொழிக. அரசன் தன்னை வியந்த விடத்து, காலம் இடம் வலிமுதலியன பற்றித் தன்னைப் பகைவருடன் ஒப்புநோக்கி ஏற்றத்தாழ்வறிய வாய்ப்பின்மையானும், அறமும் பொருளும் கவனிக்கப் படாமையானும், முற்காப்பும் விழிப்பும் இல்லாது போதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும்; தான் கருதியதை முடித்தே விடுவதென்னும் ஆணவத்தால் அறம் பொருளின்பம் பயவா வினைகளை மேற்கொள்ளின், அவற்றாற் கரிசும் (பாவமும்) பழியும் கேடுமே விளையுமாகலின் அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். தன்னைவியந்து கெட்டவர்க்குப் பொதுவியலில் வில்லிபுத்தூராழ்வாரும், வேத்தியலில் அரசு அதிகாரம் பூண்ட விசயநகர அமைச்சர் இராமராயரும் எடுத்துக் காட்டாவர்.
|