காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின்-ஒருவன் தான் பித்துக் கொள்வது போலும் பெருவிருப்புக்கொண்ட பொருள்களையும் துறைகளையும் தன் பகைவர்க்குத் தெரியாவாறு நுகரவும் கையாண் டின்புறவும் வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏது இல - அப்பகைவர் தன்னை வஞ்சித்தற்குச் செய்யுஞ் சூழ்ச்சி ஏதும் பயனற்ற தாய்ப்போம். தான் காதலித்தவற்றைத் தன்பகைவர் அறியாவாறு மறைவாக நுகரின், அவர் தன்னைக்கெடுக்கும் வாயிலின்மையால் வஞ்சிக்கப்படான் என்பதாம். காதலிக்கப்படும் பொருள்கள் காமம்,கள், வேட்டை, மதவெறி, யானைப்போர், ஏறுதழுவல் முதலியனவாம். அரசன் இவற்றுள் தன் அரண்மனைக்குள் நுகரக் கூடியவற்றை அதனுள்ளும், கூடாதவற்றை மாறுகோலம் பூண்டும் தக்க மெய்காப்போடு வெளியேறியும், நுகர்தல் வேண்டும். சூது முற்றுங் கடியப்படுங் குற்ற மாதலின் அது தனியதிகாரத்திற் கூறப்படும். பொதுமக்கட்காயின் தகர்ப்போர், சேவற்போர், காடைப்போர் முதலியனவும் காதலவாகும். ஏதும் தொடர் பில்லாத அயலாரைக் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்கு ஏதும் அன்பில்லாத பகைவரைக் குறித்தது-நூல் என்பது நூலறிவாற் செய்யப்படும் சூழ்ச்சியைக் குறித்தலின் கருவியாகுபெயர். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.
|