பக்கம் எண் :

சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

 

சூழ்வார் கண்ணாக ஒழுகலால் -மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க.

அரசரெல்லார்க்கும் சூழ்வினைத்திறம் இன்மையானும், அத்திற முள்ளவர்க்கும் பல்வேறு தொழிற்சுமை வந்தழுத்துதலானும், அரசர்க்கு இயல்பாகவுள்ள போர்த்திறம் சூழ்வினைத்திறத்தை மறைத்தலானும், மந்திரித்தொழிற்கென்றே பிறந்தவரும் அஃதொன்றையே தொழிலாகக் கொண்டவருமான மந்திரிமாரின்றிப் பொதுவாக எவ்வரசும் இனிது நடைபெறாமையின் , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தலென்றது, திருக்குறள் போலும் முப்பால் அற நூல்களுள் அல்லது அரசியலொன்றே கூறும் பொருள் நூல்களுள், அமைச்சியலிற் சொல்லப்படும் அமைச்சிலக்கணங்களை, மன்னவன் என்னும் குறுநில அரசன் பெயர் இங்குப் பெருநிலவரசனையுங் குறித்து நின்றது.