பக்கம் எண் :

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.

'இல்லாத ஏமரா ' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமிய (காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு)=ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல் , ஓட்டுநன் இல்லாத வண்டியிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.