பக்கம் எண் :

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

 

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை -முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் (இலாபமும்) இல்லை; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போல, தம்மொடு சேர்ந்து தம்அரசை, முட்டுக்கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் ஏற்படும் நிலைபேறும் இல்லை.

ஊதியப்பேற்றிற்கு முதலீடு போல அரசு நிலைபேற்றிற்கு அமைச்சுத்துணை இன்றியமையாததென்பதாம். இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை யணி.பொருளாக வந்த தொடர் ஒருமருங் குருவகம். ஆகவே, இணையணியாம்.