பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை

அஃதாவது சிறியோர் கூட்டத்தொடு கூடாமை. சிறியோராவார், கயவரும் ஐங்குற்றவாளியரும் (காமுகரும் கட்குடியரும் கவறாடுவோரும் கரவடரும் கொலைஞரும்) தன்னலக்காரரும் கல்வி நிரம்பாதவரும் உயர்ந்தோர் உண்டென்பதை இல்லையென மறுப்போருமாவர். சிறியோர் சேர்க்கையால் அறிவும் ஒழுக்கமும்திரிந்து இம்மையும் மறுமையுங் கெடுவதால், பெரியார்துணை இல்லாதுபோகு மென்பதையும், இருப்பினும் பயன்படா தென்பதையும் , உணர்த்தற்கு இது பெரியாரைத் துணைக்கோடல் என்பதன் பின் வைக்கப்பட்டது.

 

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

 

பெருமை சிற்றினம் அஞ்சும் -பெரியார் சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - சிறியோரோ அக்கூட்டத்தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக்கொள்வர்.

சிறியோர் சேர்க்கையால் தம் அறிவும் ஒழுக்கமும் கெடுவதும் அதனால் இருமையுந் துன்பம் நேர்வதும் நோக்கி, பெரியோர் அதனின்று விலகித்தம்மை முற்படக் காத்துக்கொள்வர். அஞ்சுதல் அஞ்சிவிலகுதல் "இனத்தை இனம் தழுவும்" "இனம் இனத்தோடே" ஆதலால் சிறியோரொடு சிறியோர் சேர்ந்து கொள்வர்.பண்பியின் தொழில் பண்பின்மேல் ஏற்றப்பட்டது.சுற்றியிருப்பது சுற்றம் சூழ்தல் அச்சுற்றத்திற்கு இனமாக வளைதல்.