தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் தம் வினைசெய்தற்கண் , தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளை வேற்றரசரிடத்துக் கையாளுவாராயின் , உயர்ந்தோர் அவற்றை நல்லனவென்று ஒப்புக்கொள்ளார் ; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆதலால் , அவ்வுயர்ந்தோர் இழிவென்று , கருதாதவற்றை எண்ணியறிந்து செய்தல் வேண்டும் . தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளைச் செய்தலாவது , தாம் வலியாராயிருந்தும் மெலியார் கையாளவேண்டிய இன்சொல் கொடை பிரிப்பைக் கையாளுதலும் , மெலியாராயிருந்தும் வலியார் கையாள வேண்டிய தண்டனையைக் கையாளுதலுமாம் . இவ்விரண்டும் அரசிய லறிவிலார் செயலாதலின் , உலகு கொள்ளாதென்றார் . 'தம்' என்பது ஆகுபொருளது . எள்ளாதன செய்தலாவது இயன்றவரை தமக்கு இழிவும் இழப்பும் முயற்சியு மில்லாதவற்றைச் செய்தல் முந்தின குறளிரண்டும் ஆம்புடை செயப்படுவார் திறத்தையும் , இது அதனைச் செய்வார் திறத்தையும் பற்றியன , 'உலகு' வரையறுத்த இடவாகுபெயர் .
|