பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 48. வலியறிதல்

அஃதாவது , ஆம்புடை நான்கனுள் தண்டமாகிய போரையே துணிந்த அரசன் , வினை வலி முதலிய நால்வகை வலியையும் ஒப்பு நோக்கி அளந்தறிதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் .

 

வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்

 

வினைவலியும் - தான் செய்யத்துணிந்த வினைவலியையும் ; தன்வலியும் - அதைச் செய்தற்கிருக்கும் தன் வலியையும் ; மாற்றான் வலியும் - அதை எதிர்க்க வரும் பகைவன் வலியையும் ; துணைவலியும் - இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும் ; தூக்கிச்செயல் - ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க .

இந்நால்வகை வலியுள் , வினைவலி படையெடுத்துச் செல்லுதலும் தாக்குதலும் அரண் முற்றுதலும் அதைப்பற்றுதலும் ஆகிய வினைகளாலும் , ஏனை மூன்றும் ஐவகை யாற்றல்களாலும் அளந்தாராயப்படும் . அதன் முடிபாகத் தன்வலி மிகுந்து தோன்றுமாயின் வினைசெய்வதென்று தீர்மானிக்கப்படும் . அஃதன்றிக் குறைந்து தோன்றுமாயின் தோல்வியுறுதியென்றும் , ஒத்துத்தோன்றுமாயின் வெற்றி ஐயுறவான தென்றும் , தெரிந்து வினைகைவிடப்படும் .