தம் உடை வலி அறியார் - தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது , ஊக்கத்தின் ஊக்கி - தம் மனவெழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று ; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் தாக்குதலைப்பொறுக்கும் ஆற்றலின்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற்பலராவர் . ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபாகவரும் உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் , உடை என்று குறுகி முன்பின்னாக முறை மாறிநின்றது . இனி , இடம் மாற்றாது உள்ளவாறே கொண்டு , (தாம்) உடையதம் என்று பொருள் கொள்ளினுமாம் . உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஒரு தொடர்ச் சொல்லின் நிலைமொழியாகவும் வரும் என்பதை , உடைய நம்பி . உடைய பிள்ளையார் , உடைய வரசு என்னும் வழக்கு நோக்கி யறிக . முரிந்தார் பலர் என்பது உலகத்தில் அறிவுடையார் சிலர் என்பதை உணர்த்தும் . முரிதல் என்னுஞ்சொல் முறிதல் என்னும் வடிவுங் கொள்ளும் .
|