பக்கம் எண் :

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும் .

 

அமைந்து ஆங்கு ஒழுகான் - வேற்றரசரோடு பொருந்தி அதற்கேற்ப நடந்துகொள்ளாமலும் ; அளவு அறியான் - தன் வலியளவை அறியாமலும் ; தன்னை வியந்தான் - தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட வரசன் ; விரைந்து கெடும் - விரைந்து கெடுவான் .

பகையின்றியே வேற்று நாட்டின்மேற் படையெடுத்துச்சென்று அதைக் கைப்பற்றுவது , அக்காலத்திற் புகழ்வினையாகவும் சிறந்த அரசன் கடமையாகவும் கொள்ளப்பட்டதினால் , ஓர் அரசன் தன் வலியறிந்து , அடுத்துள்ள நாட்டு அரசர் தன்னினும் வலியராயிருப்பின் அவரொடு நட்புக்கொள்ளவேண்டும் ; மெலியராயிருப்பின் அவர் துணைவலியறிந்து பகை கொள்ளலாம் . இவ்விரண்டும் செய்யாதவன் அமைதியாயிருந்தாலே கேடுண்டாம் . அங்ஙனமிருக்க , தான் மெலியானாயிருந்தும் தன்வலியறியாது வலியான்மேற்செல்லின் விரைந்து கெடுவான் என்பதாம் . 'ஒழுகான்' 'அறியான்' என்பன எதிர்மறை முற்றெச்சங்கள் . 'வியத்தல்' அதன் விளைவான பகைத்தலைக் குறித்தது .