நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒரு மரத்தின் உச்சிக்கிளையில் ஏறிநின்றவர் தம் ஊக்கத்தினால் அதன் மேலும் ஏற முயல்வாராயின் ; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அம்முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்து விடும் . நுனிக்கொம்பர் என்றது உச்சாணிக் கொம்பை . 'நுனி' இங்கு மரத்தின் நுனி ; கிளையின் நுனியன்று . தாழ்ந்த கிளைநுனியாயின் ஒருவர் சாவிற்குத்தப்பலாம் . உச்சிக்கிளையினின்று விழுந்தவர் தப்ப முடியாது . பகைமேற் சென்று முற்றுகையிட்டவன் பல அரண்களைக் கடந்து தான் செல்லுமளவு சென்றதோடமையாது , மேலும் புகுந்து கைப்பற்றற்கரிய உள்ளரணை யடைவானாயின் , அவன் கொலையுண்டிறப்பது திண்ணம் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் , இதுவும் பிறிதுமொழித லணியாம் . 'அர்' 'ஓர்' இலக்கியச் சொல்வளர்ச்சியீறு . வினைவலி யறியாமையின் தீங்கு இங்குக் கூறப்பட்டது .
|