ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் அளவறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக ஈக ; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அதுவே செல்வத்தைப் பேணிக்காத்து ஈந்தொழுகும் வழியாம் . மேல் 'ஈகை' என்றும் (382) 'வகுத்தலும்' (385) என்றும் 'கொடை' (390) என்றும் , சொல்லப்பட்ட ஈகைவகைகட்குச் செலவிடவேண்டிய பொருளளவு இங்குக் கூறப்பட்டது . "வருவாயுட்கால் வழங்கி வாழ்தல்" (திரிகடுகம் , 21) என்பதால் , அரசன் தன் மொத்த வருமானத்தில் அரைப்பகுதியை ஆட்சிச் செலவிற்கும் , காற்பகுதியை எதிர்பாராவாறு இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழக் கூடிய இடர் வந்த விடத்து அதை நீக்கும் ஏமவைப்பிற்கும் , ஒதுக்கி , எஞ்சிய காற்பகுதியை ஈகைக்குப் பயன்படுத்த வேண்டுமென்பது பெறப்படும் . இங்ஙனஞ் செய்யின் , செலவிடும் பொருளின் அளவீட்டினாலும் செய்யும் அறத்தின் பயனாலும் செல்வம் பேணிக்காக்கப்படுமாதலின் , அதைப் 'பொருள் போற்றிவழங்கு நெறி 'என்றார் . இங்ஙனமன்றி , வந்ததையெல்லாம் வழங்கிக்கொண்டிருப்பின் ,வித்துக்குற்றுண்பவன் போலும் வலியறியாது போர்க்குச் செல்வான்போலும் விரைந்து கெடுவான் என்பது கருத்து . "வளவனாயினும் அளவறிந் தளித்துண்" , என்பது இங்குக் கவனிக்கத்தக்கது .
|