பக்கம் எண் :

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

 

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கேடு இல்லை - கெடுதல் இல்லை .

இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது . 'அகலாக்கடை 'என்றதனால் , வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் .

ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.