பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 49. காலம் அறிதல்

அஃதாவது வலிமிக்கவனாய்ப் பகைமேற் செல்லும் அரசன் , அச்செலவிற்கும் போருக்கும் ஏற்ற காலத்தை அறிதல் . அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும் .

 

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது .

 

காக்கை கூகையைப் பகல் வெல்லும் - காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும் ; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும் .

காலம் ஏற்காவிடின் வலியாற் பயனில்லை யென்பது கருத்து . ஏற்ற காலமாவது , வெம்மையும் குளிரும் மிகாது நச்சுக்காற்று வீசாது தண்ணீரும் உணவும் தாராளமாய்க்கிடைத்து .நால்வகைப் படையும் நலமாகச் செல்வதாயிருப்பது . இதில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை .