ஞாலம் கருதுபவர் - உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர் ; கலங்காது - மனக்கலக்கமின்றி ; காலம் கருதிஇருப்பர் - தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி , அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர் . 'கலங்காது' என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும் . நட்பாக்கல் , பகையாக்கல் , பிரித்தல் , கூட்டல் , மேற் செல்லல் , இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள் , இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை , 'காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது' , என்பராதலின் , 'காலங் கருதியிருப்பர் 'என்றார் .
|