பக்கம் எண் :

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.

 

வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.

'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.