பக்கம் எண் :

வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல் .

 

வினைக்கு உரிமை நாடிய பின்றை - அரசன் ஒருவனை ஒருவினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின் ; அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அவ்வினைக்கு முழுவுரிமையும் உடையவனாகச் செய்க.

'வினைக்குரிமை நாடிய பின்றை' என்றது வினைவகையான் வேறாகு மாந்தனன்மை யறிந்தபின் என்பதாம் . அதற்குரியனாகச் செயல் என்றது அரசன் அதில் தலையிடாதிருத்தலை . தலைசிறந்த ஆற்றலும் தன்மானமுமுள்ள வினைத்தலைவரின் வினையில் தலையிடுவது . தெளிந்தான்கண் ஐயுறவு போல் தீங்கு விளைக்கு மாதலின் , அது தகாதென்றார் . அரசன் ஒருவனது வினையை மறைவாகக் கவனித்து வருவதுவேறு ; அதில் வெளிப்படையாகத் தலையிடுவது வேறு . ஒரு தகுந்த வினைத்தலைவனது வினையில் அரசன் தலையிடாது முழுப்பொறுப்பையும் அவனிடம் விட்டு விட்டால் , அவன் மகிழ்ச்சியும் பெருமையும் ஊக்கமுங் கொண்டு அதை முழுவெற்றியாகச்செய்து முடிப்பான் என்பது கருத்து.