பக்கம் எண் :

விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும் .

 

விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் ; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும்.

அன்பார்ந்த உறவினர் பல்வகைச் செல்வத்தையுங் காத்து வளர்ப்பராதலின் , 'ஆக்கம் பலவுந் தரும்' என்றார் . 'உற்றோரெல்லாம் உறவின ரல்லர்' . ஆதலின் , 'விருப்பறாச் சுற்றம்' என்றும் , மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வத்தை 'அருப்பறா வாக்கம்' என்றும் கூறினார் . 'இயையின்' என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது . அரும்புதல் - தோன்றுதல் . விரும்பு - விருப்பு . அரும்பு - அருப்பு. ஆக்கம் தொழிலாகுபெயர்.