பக்கம் எண் :

கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை.

 

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது -உலக நடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆதலால் , அக்கண்ணோட்டம் இல்லாதார் இவ்வுலகத்திலிருப்பது மாநிலத்திற்கு வீண்சுமையேயன்றி ஒரு பயனுமில்லாததாம்.

உலகியல் என்பது ஒப்புர வொழுகல். அது செய்யாதவன் மக்கட்பிறப்படைந்தும் அதனாற் பயன்பெறாதவனாதலின், 'நிலக்குப் பொறை' என்றார். நிலக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கது. இம்மையிற்பிறக்கும் மறுமையில் தமக்கும் பயன் படுமாறு நடந்து கொள்ளாதவர் , இவ்வுலகில் இருப்பதினும் தாம் நுகர்வனவற்றைப் பிறர்க்குப் பயன்படும்படி நுகரவிட்டு விட்டு இறப்பதேமேல் என்பது கருத்து.