பாடற்கு இயைபு இன்றேல் பண்என் ஆம்- பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் பண்ணால் என்ன ஆகும் ?; கண்ணோட்டம் இல்லாத கண் கண் என் ஆம் -அதுபோலக் கண்ணோட்டமில்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்? கண்பார்வையின் சிறந்த பயன் கண்ணோட்டமே என்பது கருத்து. பண் என்பது இசைவகை. அது பாலையாழ் முதலிய நாற்பெரும் பண்ணின் வகையான நூற்று மூன்று பண்களின் விரியாக நரப்படைவா லுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள். (சிலப்.அரங்.45, அருஞ்சொல்லுரை). அவை ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் ஆக முரல்(சுரம்)உடைமைபற்றி, பண்(சம்பூரணம்), பண்ணியல்(ஷாடவம்), திறம்(ஒளடவம்), திறத்திறம்(சுராந்தியம்) என நால்வகைப் பாகுபாடுடையன. பாடற்றொழில்கள்: "சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா முச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை யேயுங்கா லோசை யியம்பு".
"உள்ளாளம் விந்து வுடனாத மொலியுருட்டுத் தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல் கம்பித்தல் குடிலம் ஒருபதின்மே லொன்றென் றுரை." (இசைமரபு)
"கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்திருவ ருள்ளாளப் பாடலுரை". (இசைமரபு) என்பவற்றால் அறியப்படும். நாதம் -அரவம். கம்பிதம் - நடுக்கம். இசைக்கருவிகளுள் தலைமையான யாழை இயக்கும் முறைகள் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல் , தைவரல் , செலவு , விளையாட்டு, கையூழ் ,குறும்போக்கு என்னும் எண்வகை இசையெழாலும் ; வார்தல் , வடித்தல் ,உந்தல் ,உறழ்தல் , உருட்டல் , தெருட்டல் , அள்ளல் , பட்டடை என்னும் எண்வகைக் கரணமுமாம். கண்கண்ட வழி நிகழ்தலாற் கண்ணோட்டத்தைக் கண்ணின் பண்பாகக் கூறினர். இறுதியிலுள்ள 'கண்' காலங்குறித்து வந்த இடப்பெயர்.பண் பாடற்கியைபின்மை , ஆளத்தி (ஆலாபனை) செய்ய முடியாவாறும் இன்பந்தராவாறும் ஆரோசை அமரோசைகளில் (ஆரோக அவரோகணங்களில்) பகைமுரல் கலப்பதால் நேர்வதாம்.
|