கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் அழகு செய்வது கண்ணோட்டமே; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் -அவ்வணிகலமின்றேல் அது அறிவுடையோராற் புண்ணென்றே கருதப்படும். மையூட்டும் பெண்டிர் கண்ணிற்கும் மையூட்டா ஆடவர் கண்ணிற்கும், செல்வம் போன்றே வறியாரும் அணியக்கூடிய சிறந்த அணிகலம் கண்ணோட்டம். அஃதின்றி இவ்வுறுப்பிற்கு வேறு அணிகலமுமில்லை.ஆதலால், அவ்வணிகல மில்லாதார் கண் அழகிழப்பதுடன் பல்வேறு வகையில் நோவுதரும் உறுப்பாயிருப்பது பற்றி, 'புண்ணென்றுணரப் படும்' என்றார். பல்வேறு வகை நோவாவன கண்ணோயும் தூசியுறுத்தலும் தீய ஆசையுண்டாக்குதலுமாம்.
|