கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்- கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர்- இயங்குதிணையராயினும் நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர். மரமுங் கண்ணோடியைந்து கண்ணோடாமையின் கண்ணோடாதவர்க்கு சிறந்த உவமமாயிற்று. இது வினையுவமை.மரக்கண்ணாவது அதன் கணு."மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" (முத்தொள்.101). கணுக்கணுவாயிருப்பதால் மூங்கிலுங் கண்ணெனப்படும். புறக்கண் கண்டவழி ஓடுவது அகக்கண்ணேயாயினும் ,வழியாயிருத்தல் பற்றியும் பெயரொப்புமை பற்றியும் பின்னதன் வினை முன்னதன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. கண்ணோடுதல் என்பது ஒரு சொற்றன்மைப்பட்டு முதல் வினையாய் நின்றது.' மரம்' வகுப்பொருமை. மண்ணோடியைந்த மரம் என்பதற்குச் "சுதை மண்ணோடு கூடச்செய்த மரப்பாவை" என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைத்திருப்பது ஒரு சிறிதும் பொருந்தாது.
|