புகழ் பரிந்த இல் இல்லோர்க்கு - தனக்கும் தன் கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவியில்லாதார்க்கு; இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை இல்லை-தம்மைப் பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடையில்லை. பரிந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. ஏறு என்னும் விலங்கின ஆண்பாற் பொதுப் பெயர் நடைச் சிறப்புப்பற்றி இங்கு அரிமாவின் ( சிங்கத்தின் ) ஆண்பாலைக் குறித்தது. கற்புடை மனைவியாற் கணவன் மதிக்கப்படுதலை, "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம். 3 : 6 ), "அறம்பா டிற்றே ஆயிழை கணவ" (புறம். 34 : 7 ) "சேணுறு நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற். 88 : 36)
என்னும் விளிகள் உணர்த்துதல் காண்க. |