யானை பரியது கூர்ங்கோட்டது ஆயினும் -யானை விலங்குகளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளதுமாயினும் ; புலி தாக்குறின் வெருவும் -உருவப் பருமையுங் கொம்புமில்லாத புலி தன்னைத்தாக்கின் ,அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும். பருத்தவுடம்பு வலிமிகுதி குறிக்கும். யானை மெய்வலிமை மிக்கதும் குத்தும் உறுப்புடையது மாயிருந்தும் ,ஊக்கமின்மையால் அதனை யுடைய சிற்றுடம்பு மோழைத் தலைப்புலியாற் கொல்லப்படும், என்பது ஊக்கமில்லாத அரசர் படைப் பெருமையுங் கருவிச்சிறப்பும் உடையவராயினும், அவை குன்றியிருந்தும் ஊக்கஞ் சிறந்த சிற்றரசரால் வெல்லப்படுவர் என்பதை உணர்த்துதலால். இது பிறிது மொழிதல் அணியாம் .உம்மை உயர்வு சிறப்பு. ' வெரூஉம்' இன்னிசையளபெடை.
|