பக்கம் எண் :

குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

 

ஒருவன் மடியாண்மை மாற்ற - ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே ; குடி ஆண்மையுள்வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.

இஃது ஓரரசன் குற்றமுந் திருத்தமும். மடியாண்மை மடியை ஆளுந்தன்மை. 'குடியாண்மை' உம்மைத்தொகை.இனி,

'குடி ஆண்மையுள் வந்த குற்றம் -நெடுங்கால மாகத்தொடர்ந்து வரும் ஒரு குடியுள்ளும் அதன் தலைவரின் ஆண்மையுள்ளும் நேர்ந்த குற்றங்களால் விளைந்த கேடுகள்; மடியாண்மை - அவற்றிற்குக் கரணியமாயிருந்த சோம்பல் தன்மையை ; ஒருவன் மாற்றக் கெடும் - ஊக்கமும் பெருமுயற்சியு முள்ள ஒரு தலைவன் நீக்கியவுடன் நீங்கும்'. என்றுமாம்.

இதற்குக் கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்க்கு அடங்கியிருந்த சோழர்குடியில் தோன்றிய விசயாலயன், கி.பி.850 போல் தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் தன் குடியுயர்வை நிலைநிறுத்தியமை, நல்லெடுத்துக்காட்டாம். குடிமைக் குற்றம் ஒற்றுமையின்மையும் உட்பகையும் சேரபாண்டியரொடு சேராமையும் .ஆண்மைக் குற்றம் போர் முயற்சியின்மை. இஃது ஓரு குடியின் குற்றமுந் திருத்தமும்.