பக்கம் எண் :

மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு.

 

மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்) மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே , குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் ' என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.