ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே-இயலுமிட மெல்லாம் போரால் வினைசெய்தல் நல்லதே; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்-அது இயலாவிடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் ஏற்ற வற்றை எண்ணிச் செய்க. வினையென்றது இங்குத் தண்டத்தை. எளிய பகைவரை அடக்குவதும் விரைந்து பொருள் தருவதும் போரேயாகலின், அதை நன்றென்றார். இயலுமிடம் தான் வலியனான காலம்; இயலாவிடம் தான் மெலியனான காலம்; இயல்வது ஐயுறவான இடம் தான் ஒத்தோனான காலம். இயலாக் காலத்தும் ஐயுறவுக் காலத்தும் இன்சொல், பிரிப்பு, கொடை என்னும் ஏனை மூன்று ஆம்புடைகளுள் ஒன்றும் பலவும் ஏற்ற வகையிற் கையாள்க என்றார். ஏகாரம் தேற்றம்.
|