தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன். பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.
|