பக்கம் எண் :

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது.

 

கற்று-அறநூல்களையும் அரசியல் நூல்களையுங் கற்று; கண் அஞ்சான்-பகையரசரின் சினப்பார்வைக்கு அஞ்சாது; செலச்சொல்லி-அவர் மனத்திற் பதியுமாறு செய்திகளைச் சொல்லி; காலத்தால் தக்கது அறிவது தூது ஆம்- காலத்திற் கேற்பத் தகுந்த வழிகளைக் கையாள் பவனே நல்ல தூதனாவன்.

நூற்கல்வி பயன்படாவிடத்துத் தன் மதிநுட்பத்தாலும் உலகியலறிவாலும் சமையத்திற் கேற்றவாறு தக்க வழிகளைக் கையாண்டு, வினைமுடிக்க வேண்டியிருத்தலின், 'தக்கதறிவதாந் தூது' என்றார். 'ஆம்' இங்கும் பிரித்துக் கூட்டப்பட்டது.