கடன் அறிந்து-வேற்றரசரிடம் தான் நடந்து கொள்ளவேண்டிய முறைமையை அறிந்து; காலம் கருதி- அவரை நல்ல மனநிலையிற் காணுதற் கேற்ற சமையம் பார்த்து; இடன் அறிந்து- தான் வந்த செய்தியைச் சொல்லுதற்கேற்ற இடமும் அறிந்து; எண்ணி- தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் ஒழுங்காக எண்ணிவைத்து; உரைப்பான் தலை- அவ்வாறு சொல்பவன் தலையாய தூதனாவான். நடந்துகொள்ளும் முறைமையாவது, அவர் நிலைமையும் அவர் நாட்டு வழக்கமும் தன்னரசன் நிலைமையும் நோக்கி, அவற்றிற்கேற்பக் காணும் முறைமையும் நிற்கும் முறைமையும் சொல்லும் முறைமையுமாம். காலம் என்றது, தட்பவெப்பம் மிகாதநாளிற் பசியுங் களைப்பும் சினமும் வருத்தமும் கவலையுமின்றி மனம் மகிழ்ந்து அல்லது அமைந்து இருக்கும் சமையம். இடம் என்றது, தனக்குப் பகையானவரன்றித் துணையானவர் உடனிருக்குமிடம். எண்ணுதலுள், அரசன் வினவக்கூடிய வினாக்களும் சொல்லக்கூடிய உத்தரவுகளும், தான்மேற்கொண்டு கூறும் மறுமாற்றங்களும் அடங்கும். "வடநூலார் இவ்விருவகையாருடன் ஓலைகொடுத்து நிற்பாரையுங் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை என்று வகுத்துக் கூறினாராகலின் , அவர் மதமுந் தோன்றத் 'தலை' யென்றார்." என்று பரிமேலழகர் இங்கும் தம் தன்மையைச் சிறிது காட்டியுள்ளார். 'தலை' யென்றது சிறந்தவன் என்றே பொருள்படுவதாம். ஓலையை மட்டும் நீட்டிநிற்பவன் தூதனாகான்; ஓலையாளாகவேயிருப்பான். அத்தகைய வோலை நட்புத்திருமுகமாகவோ பேரரசன் கட்டளையாகவோதான் இருக்கமுடியும். தூதன் என்பது அதிகாரத்தான் வந்தது. இவ்வாறு குறளாலும் வகுத்துக்கூறுவான் திறம் கூறப்பட்டது.
|