தூய்மை-மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; துணைமை-வேற்றரசரின் அமைச்சரைத் துணையாகவுடைமையும்; துணிவுடைமை- சொல்ல வேண்டிய செய்தியை அஞ்சாது சொல்லும் திடாரிக்கமும்; இம்மூன்றின் வாய்மையும்-இம்மூன்றொடு கூடிய மெய்ம்மையும்; வழி உரைப்பான் பண்பு-தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை அவன் சொன்னவாறே வேற்றரசரிடம் சென்று கூறும் தூதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாம். மூவகை யாசைபற்றிச் செய்தியை வேறுபடக் கூறாமைப்பொருட்டுத் தூய்மையும், வேற்றரசன் சினத்தைத் தடுப்பதற்கும் தன் வினைக்குச் சார்பாயிருத்தற்கும் துணைமையும், வெறுக்கத்தக்க செய்தியிருப்பினும் விடாமற் சொல்லுதற் பொருட்டுத் துணிவும், எல்லாராலும் நம்பப்படும் பொருட்டு மெய்ம்மையும், வேண்டுமென்றார். 'இன்' இங்கு 'ஒடு'ப்பொருளது. இனி, 'இன்'னைச்சாரியையாகக் கொண்டு ஒடுவுருபு தொக்கதெனினுமாம்.
|