மன்னர் விழைப விழையாமை - தம்மால் அடுக்கப் பட்ட அரசர் தம் பதவிக்கேற்பச் சிறப்பாக விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அவ்வரசர் வாயிலாகவே அமைச்சர் முதலியோரான தமக்கு நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். "மன்னர் விழைப' என்றது,உண்டி,ஆடையணி,உறையுள்,ஊர்தி, பெண்ணின்பம் முதலியவற்றுட் சிறந்த வகைகளையும்; கண்ணியம், புகழ் முதலியவற்றில் ஒப்புயர்வின்மையும்; அரசனுக் கென்றே ஒதுக்கப் பெற்ற ஆடிடம், நீர்நிலை முதலியவற்றையும். அரசனுக்கு ஒப்பாதல் அஞ்சி இவற்றை விரும்பாதொழியவே, அரசனே அவ் வச்சத்திற்கு மகிழ்ந்து பலவகைச் செல்வத்தையும் நிலையாக நுகரத்தருவான் என்பதாம்.
|