பக்கம் எண் :

முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.

 

இதற்கு ஈருரைகள் உள.

(1) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித்துணையாகக் பெற்றால்; முகம் நோக்கி நிற்க அமையும்-அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே நின்றாற் போதும்; தன் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லவேண்டியதில்லை. அவர் தாமாகச் செய்தியை அறிந்து கொள்வார்.

(2) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறை வேண்டுவான், தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் உற்ற குறையை யுணர்ந்து அதைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர்தன் முகம்நோக்கும் எல்லையில் தானும் அவர் முகம் நோக்கி நின்றாற்போதும்.

இது பரிமேலழகருரையைத் தழுவியது. இவ்வதிகாரம் அரசரைச் சார்ந்து ஒழுகுபவர் அவர் குறிப்பறிதலைப் பற்றியதாதலாலும், குறையுறுவான் செய்தி'இரவு' அதிகாரத்திற்கே ஏற்றதாதலாலும், இப்பொருட்கு 'உணர்வார்' என்னுஞ் சொற்கு வழிநிலை வினைப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதனாலும், இவ்வுரை முன்னது போற் சிறந்ததன்றாம் .

இம் மூன்று குறளாலும் குறிப்பறிதற்கு முகங் கருவியென்பது கூறப்பட்டது.