பக்கம் எண் :

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி
னடைதெரிந்த நன்மை யவர்.

 

சொல்லின் நடைதெரிந்த நன்மையவர்-சொற்களின் வழக்காற்றை யறிந்த நல்லறிஞர் ; இடைதெரிந்து-அவையிற் பேசுஞ் சமையத்தை நோக்கி; நன்கு உணர்ந்து சொல்லுக-அவையினரின் மனநிலையைத் தெளிவாக அறிந்து அதற்கேற்ப ஒரு பொருளைப் பற்றிச் சொல்க.

சொல்லின் நடையாவது; உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை இடவழக்கிலும், இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்னும் இருவகை ஆட்சி வழக்கிலும், செஞ்சொல் ஆகுபொருட்சொல் குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்லும், முறையே, செம்பொருளும் ஆகுபொருளும் குறிப்புப் பொருளும் உணர்த்தும் முறை. இடைதெரிதலாவது ஊண் வேளையும் உறக்க வேளையும் நீண்டநேரம் கேட்டுச் சலித்தவேளையும் வேறோர் இடத்திற்குச் செல்லும்வேளையும் அறிதலாம், நன்கு உணர்ந்து சொல்லுதலாவது. அவையினர்க்கு விருப்பமான பொருளை இனிதாகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவுஞ் சொல்லுதல்.