ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்-அறிவால் விளங்குவார்முன் தரமும் அறிவுச்சுடராக விளங்குக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்-அறிவில்லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச்சாந்தின் நிறத்தைக் கொள்க. 'ஒளியார்' என்றது சொற்பொழியும் அறிஞரின் மிக்காரையும் ஒத்தாரையும். 'ஒளியார்' ஒள்ளியார் என்பதன் தொகுத்தல்.இனி, அகவொளியாகிய அறிவுடையார் எனினுமாம். ஒள்ளியராதல் மதிநுட்பமும் நூற்கல்வியும் உலகியலறிவும் சொல்வன்மையுந் தோன்ற விளக்கியுரைத்தல். 'வெளியார்' வெள்ளியார் என்பதன் தொகுத்தல். அறிவில்லாதவரை வெளியார் என்றது, வயிரமில்லாத மரத்தை வெள்ளையென்றும் வெளிறென்றும் சொல்லும் வழக்குப்பற்றி. அறிஞருக்கு அறிவு விளங்கித் தோன்றுவதுபோல் அறிவிலிகட்கு அறியாமையே விளங்கித் தோன்றுமாதலின், 'வான்சுதை வண்ணங் கொளல்' என்றார். அறியாமையின் இழிவுபற்றிக் கருத்துப் பொருள் வெண்மையைக் காட்சிப்பொருள் வெண்மையோ டிணைத்துக் கூறினார். அறிவிலிகட்கு அறிவிலியாகுக என்பது, சிறுபிள்ளை கட்குச் சிறுபிள்ளையாகுக என்பது போன்றதாம்.
|