பக்கம் எண் :

பகையகத்துக் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர்

 

பகையகத்துச் சாவார் எளியர்-போர்க்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாகவல்லவர் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர்-ஆயின், ஓர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வவ்லவர் சிலரே.

இது பகையஞ்சார்க்கும் அவையஞ்சார்க்குமுள்ள தொகைவேற்றுமை கூறிற்று. அமர்க்கள மறத்தினும் அவைக்கள மறமே சிறந்த தென்பது கருத்து. ஒப்புமை கூறும் உவமையிற் போன்றே ஒவ்வாமை கூறும் வேற்றுமையிலும் உள்ள இரு கூறுகளுள், ஒன்றன் அடை இன்றொன்றைச் சாருமாதலின், அஞ்சாமை 'சாவார்' என்பதனொடு கூட்டப்பட்டது. பொருட்கேற்பப் பொருதல் சொல்லுதல் என்னும் இரு சாரார் வினைகளும் வருவித்துரைக்கப்பட்டன. எளிமையும் அருமையும் பெரும்பான்மை சிறுபான்மையொடு தாழ்வுயர்வும் உணர்த்தி நின்றன. இம் முக்குறளாலும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.