பக்கம் எண் :

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.

 

சிறு காப்பின் பெரு இடத்தது ஆகி-காவல் செய்ய வேண்டிய இடம் சிறிதாய், வாழ்தற்கேற்ற உள்ளிடம் அகன்ற தாய்; உறுபகை ஊக்கம் அழிப்பது-தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் மனவெழுச்சியைக் கெடுப்பதே; அரண்- சிறந்த கோட்டையரணாவது.

நாற்புறத்து வாயில்கள் தவிர, மற்ற இடமெல்லாம் தகர்க்க முடியாத திண்ணிய மதிலாகவும் அணுகமுடியாத பொறிகளேற்றப் பட்டதாகவும் இருத்தலின், 'சிறுகாப்பின்' என்னும்: அரசனும் படையும் நகரமக்களும் ஏந்தாக (வசதியாக) வாழ்தற்கேற்ப அகன்றிருத்தல் பற்றிப் 'பேரிடத்ததாகி' என்னும்; தம் ஆற்றலும் ஊக்கமும் நோக்கி, இன்றே யழித்துவிடுவோம் என்னும் பூட்கை மறத்துடன் வந்த பகைவர், மதிலைக்கண்டவுடன் ஊக்கமழிதலின் 'ஊக்கம் அழிப்பது' என்றும்; கூறினார். பேரிடத்தைக் கோட்டையுள்ளிடம் என்று கொள்ளாது நாடுமுழுதுமென்று கொண்டு, 'வாயிலும் வழியு' மொழிந்த விடங்கள் மலை, காடு, நீர்நிலை யென்றிவற்றுள் ஏற்பனவுடைத்தாதல் பற்றிச் 'சிறுகாப்பின்' என்று கூறியதாக வுரைத்தார் பரிமேலழகர். முதலிரு குறள்கள் தவிரப் பிறவெல்லாம் மதிலரணைப் பற்றியே சிறப்பாகக் கூறுவதைக் கூர்ந்து நோக்கிக் காண்க. அகழி மதிலைச் சேர்ந்திருப்பதனால், அது மதிலொடு சேர்த்தே கருதப்பெறும்.