எல்லாப் பொருளும் உடைத்தாய்- அரசனும் படைமறவரும் குடிகளுமாகிய அகத்தாரெல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யெல்லாம் உள்ளே கொண்டதாய்; இடத்து உதவும் நல் ஆள் உடையது- நொச்சிமறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருதுதவும் நன்மறவரை யுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது. அரசப்பத்தியும் நாட்டுப்பற்றும் மறமும் மானமும் ஊக்கமும் ஒருங்கேயுடைய மறவரை 'நல்லாள்' என்றார். எல்லாப் பொருளுமுடைமையால் நெடுநாள் முற்றுகையைத் தாங்குதலும், இடத்துதவும் நல்லாளுடைமையால் தோல்வியுறாது வெற்றுபெறுதலும், கூடுமென்பது கருத்து.
|