பக்கம் எண் :

முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.

 

முற்றியும்-வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும்-அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்றுதிரண்டு முனைந்து பொருதும்; அறைப்படுத்தும்-அமைச்சரையும் படைத்தலைவரையும் அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெறும் பொருள் கொடுத்து வயப்படுத்திக் கோட்டைவாயிலைத் திறக்கச் செய்தும்; பற்றற்கு அரியது-உழிஞையாராற் கைப்பற்ற முடியாததே; அரண்-சிறந்த கோட்டை யரணாவது.

இம்மூன்று போர்வலக்காரங்களுள்ளும், முதலது மதிற்சிறப்பாலும், இரண்டாவது நல்லாளாலும், மூன்றாவது அதிகாரிகளின் நேர்மையாலும், வாயாவாம். அறைப் படுத்தலெனினும் அறைபோக்குதலெனினும் கீழறுத்தலெனினும் ஒன்றே. கையூட்டாற் காட்டிக் கொடுக்கச் செய்தல் என்பது இவற்றின் பொருள்.