இல்லாரை எல்லாரும் எள்ளுவர்-மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட எல்லாரும் தாழ்வாகக் கருதுவர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்-வெறொரு நலமும் இல்லாதவராயினும் செல்வ முடையாரை அரசனுட்பட எல்லாரும் மதித்துப் போற்றுவர். எள்ளுதலாவது பார்த்தலும் உரையாடுதலுஞ் செய்யாமை. சிறப்புச் செய்தலாவது அரசன் பட்டமளித்தலும், அரசனும் பெற்றோருந் தவிரப் பிறரெல்லாம் கை கூப்புதலும் மதிப்பான இருக்கை யளித்தலும், எல்லாரும் அவர் வேண்டுகோளை நிறைவேற்றலுமாம். எள்ளுதல் என்னும் உளவினை, இகழ்தலாகிய வாய்வினையையும் புறக்கணித்தலாகிய மெய்வினையையுந் தழுவும். செல்வத்தின் சிறப்பை வலியுறுத்தும் பொருட்டு இருவகையாலுங் கூறினார். "கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். (நல்வழி,34)
|