பக்கம் எண் :

பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.

 

பொருள் என்னும் பொய்யா விளக்கம்-செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தாவிளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்-தன்னை உடையவர்க்கு அவர் கருதிய தேயத்துச் சென்று பகையென்னும் இருளைப் போக்கும்.

எக்காலத்தும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாதலாலும் எல்லாரையும் விளங்கச் செய்தலாலும், 'பொய்யா விளக்கம்' என்னும்; ஏனை விளக்கொடு வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும், பகையை விரைந்தழித்தல் பற்றி 'இருளறுக்கும்' என்றும், கூறினார். பகையென்னும் இருள் என்னாமையால் இது ஒருமருங் குருவகம். இம்மூன்று குறளாலும் செல்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.