அழிவு இன்று-போரின் கண் தோல்வியடைதலின்றி; அறை போகா தாகி-பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப் படாததாய்; வழிவந்த வன்கணதுவே-தொன்று தொட்டுத் தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறத்தை யுடையதே; படை-சிறந்த படையாவது. மற வலிமையால் அழிவின்மையும் அரசன்மீ தன்பும் நாட்டுப்பற்றும் தன்மானமும், உயர்ந்த வொழுக்க முடைமையால் அறைபோகாமையும் விளைந்தன. "கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளி ராதல் தகுமே மேனா ளுற்ற செறுவிற்கிவ டன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருந லுற்ற செருவிற்கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே. இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி யொருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே." என்னும் புறப்பாட்டும் (271), "கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி யெய்போற் கிடந்தானென் னேறு." என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளும், வழிவந்த வன்கண்மைத் திறத்தை விளக்கும். அது என்னும் சுட்டுப் பெயர் ஈறானபின்பும் தனித்து நின்றதுபோல் வகரவுடம்படுமெய் பெற்றது.
|