அல்லது இடித்து அழச்சொல்லி-நன்மையல்லாதது செய்தவிடத்துக் கண்டித்து மனம் வருந்துமாறு அறிவுரை கூறி; வழக்கு அறிய வல்லார்-உலக நடையறிந்து அதன்படி நடப்பிக்கும் திறமை யுடையவரை; ஆய்ந்து-ஆராய்ந்து கண்டு; நட்புக்கொளல்-அவரொடு நட்புக் கொள்க. 'அல்லது' நல்லதல்லாத தீவினை. இச்சொல் இப்பொருட்டாதலை 'அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல' (கலித். 148) என்பதனால் அறிக. நீண்டகாலமாக வழங்கிவருவது வழக்கு. அது இங்கு உயர்ந்தோர் ஒழுக்க வழக்கைக் குறித்தது. உலக நடையறிதல் அரிதாகலின் 'அறியவல்லார்' என்றார். 'அழ அழச்சொல்லுவார் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிறர்' என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத்தக்கது.
|