பக்கம் எண் :

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.

 

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை-நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை; அதற்கு உப்புஆதல் சான்றோர் கடன்-அதனால் அவ்வுரிமைக்குச் சுவையூட்டுவதுபோல் துணையாதல் அறிவுடையோர் கடமையாம்.

உரிமை, கிழமை, கெழுதகைமை என்பன ஒருபொருட் சொற்கள். 'நட்பிற் குறுப்பு' என்றமையால், கெழுதகைமை யில்லா நட்பு உறுப்பறைபோல நிறைவில்லாத தென்பதாம். இவ்வுண்மையை அறியாதார் கெழுதகைமைக்கு உடன்படாவிடினும், அறிந்தார் உடம்பட வேண்டுமென்றற்குச் 'சான்றோர் கடன்' என்றார். 'மற்று' அசைநிலை.