பக்கம் எண் :

பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை.

 

பகல் கருதிப் பற்றா செயினும் - ஒருவன் தன்னொடு கூடி வாழாமை கருதி வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னா செய்யாமை தலை- அவனொடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் தீயவற்றைச் செய்யாதிருத்தல் சிறந்ததாம்.

தீயன செய்யச் செய்யப் பகைமை மேன்மேல் வளர்தலாலும், அதனால் மனநோவும் உடல்நலக்கேடும் வாழ்நாட்குறைவும் மக்கள் அமைதிக் குலைவும் ஏற்படுதலாலும், அவற்றைச் செய்யாவிடின் அன்பும் அமைதியும் நிலவி இன்பும் பண்பாடும் வளர்ந்து வாழ்நாள் பெருகுதலாலும், 'இன்னா செய்யாமை தலை' என்றார். 'பற்றா', 'இன்னா' எதிர்மறைவினையாலணையும் பெயர்கள். உம்மை இழிவு.