பக்கம் எண் :

மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்.

 

இகல் மேவல் இன்னா அறிவினவர்- மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்- வெற்றியொடு பொருந்தும் அரசியலுண்மைகளை அறியமாட்டார்.

'மெய்ப்பொருள்' தப்பாது வாய்க்கும் நெறிமுறைகள். 'இன்னா அறிவு' தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் தீங்கு விளைக்கும் அறிவு. இகலால் அகக்கண் மங்குதலால் 'காணார்' என்றார். இவ்விருகுறளாலும் இகலினார்க்கு வருந் தீங்கு கூறப்பட்டது.