வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக- தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மெலியார்மேல் பகை ஓம்பா மேக- மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக. துணைவலியுடைமையால் மெலியார் வலியாராதலும் அஃதின்மையால் வலியார் மெலியாராதலும் உண்மையால், மெலியார் என்னுமிடத்துத் துணைவலியின்மையுங் கொள்ளப்படும். இது பொருட்பாலாதலாலும், "வினையே ஆடவர்க்குயிரே" (குறுந். 135) என்பதாலும் , வணிகர் பொருளீட்டும் வினை போன்றே அரசர் பிறநாடுகளைக் கைப்பற்றச் செய்யும் போர் வினையும் அவர் கடமையாகப் பண்டைக் காலத்திற் கருதப்பட்டதினாலும், "மெலியார் மேல் மேக பகை" என்றார். மேலும், இங்ஙனம் வலியப் போர்க்குச் செல்லுதலோடு, 'எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (தொல். 1008) "மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப" (தொல். 1009) என்ற முறைப்படி வந்த போரை விடாமையும் அவர் கடமையாயிற்று.
|