வில் ஏர் உழவர் பகை கொளினும்-வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டாலும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க-சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள்ளா திருக்க. பொருநர்-போர்மறவர். சொல்லேருழவர்-புலவரும் அரசியலறிஞரான அமைச்சரும். பொருநர் உடல்வலிமையாற் செய்யுங்கேடு ஒரு சிலரையே தாக்கும். ஆயின், அறிஞர் சூழ்ச்சிவலியாற் செய்யுங்கேடு பல பெருநாடுகளையுந் தாக்கிவிடும், உம்மை எதிர்மறை, தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழிக்கக் கூடாது. என்பது போன்றது இக்குறள். ஆதலால், இருசாராரையும் பகைத்துக்கொள்ளற்க என்பதே கருத்தாம். உழவே முதன்முதல் தோன்றிய மாந்தன் கைத்தொழிலாதலால், ஏனைத் தொழிலாளரையும் உழவராகவும் அவர் தொழில் கருவியை ஏராகவும் உருவகித்தார். தோண்டுதற் பொருள் கொண்ட தொள் என்னும் வினையடிப் பிறந்து பயிர்த்தொழிலை முதலிற்குறித்த தொழில் என்னும் சொல், இன்று தொழில் பொதுப்பெயராக வழங்கி வருவது கவனிக்கத்தக்கது. "The pen is mightier than the sword." என்னும் ஆங்கிலப் பழமொழி இக்குறட் கருத்ததே. காளமேகம் திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெய்வித்தது, நிறைமொழி மாந்தர் மனமொழி போன்றதாம். ஆயின், அமைச்சர் தம் சூழ்ச்சியால் விளைவிக்கும் கேடு, வில்லேருழவரான மறவர் வாயிலாக நிகழ்த்துவதே என வேறுபாடறிக. ஆகவே, அத்தகைய அமைச்சரைத் துணைக் கொண்ட அரசர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கரிகால்வளவனும் சேரன்செங்குட்டுவனும் போன்றாராயின் இருமடி வலியராதலால், அவரொடு பகை எக்கரணியத்தையிட்டுங் கொள்ளத்தக்க தன்றென்பது சொல்லாமலே பெறப்படும்.
|