பக்கம் எண் :

வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு!.

 

வாள்போல் பகைவரை அஞ்சற்க- கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு அஞ்ச வேண்டுவதில்லை; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக- ஆனால், உறவினர் போலிருந்து மறைவாகப் பகைக்கும் உட்பகைவரின் போலியுறவிற்கு மிகுதியாக அஞ்சுக.

'வாள்போல் பகைவரை யஞ்சற்க' என்றது, உட்பகைவர்க்கு அஞ்ச வேண்டிய அளவு வெளிப்பகைவர்க்கு அஞ்ச வேண்டா மென்னுங் கருத்தினதேயன்றி, அஞ்சவே வேண்டாமென்னுங் கருத்தினதன்று வெளிப்பகை முன்னறிந்து தடுக்கவும் தற்காக்கவும் ஏதுவாயிருத்தலானும், உட்பகை அங்ஙனம் முன்னறியவும் தப்பிக் கொள்ளவும் இடமின்றி அழிவைத் தருதல் உறுதியாதலானும், முன்னதற்கு 'அஞ்சற்க' என்றும், பின்னதற்கு 'அஞ்சுக' என்றும், கூறினார். வெளிப்பகையினும் உட்பகை மிகக் கொடிது என்பது கருத்து. 'பகைவர்' இரண்டனுள் முன்னது ஆகுபொருளது. இக்குறளால் உட்பகையினின்று விலகுதல் கூறப்பட்டது.